பணக்காரர்களாக வேண்டும், பெரும் பணம் ஈட்ட வேண்டும், கார் வீடு தோட்டம் என்று சகல வசதிகளையும் அடைய அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் பெரும்பாலானவர்களுக்கு இருப்பது இயல்பே.
இது போன்ற தங்களின் நியாயமான நோக்கங்களை – ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள தினம் தினம் உழைத்து அதன் மூலம் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்து விடுவதில்லை.
அப்படிக் கடின உழைப்பின்றி எளிதாகப் பெரும் பொருள் ஈட்டி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களே பெரும்பாலும் பங்குச் சந்தை பற்றி முழுமையான அறிதல் இல்லாமல் அதில் முதலீடுகள் செய்து விட்டுப் பின்னர் பணத்தை இழந்து தவிக்கின்றனர்.
சில அடிப்படைகளைப் பார்ப்போம்,
பங்குச்சந்தை என்பது பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்கி பின்னர் அந்தப் பங்குகளின் விலை உயர்ந்த பின்னர் அந்தப் பங்குகளை விற்று அதன் மூலம் லாபம் சம்பாதிக்கும் இடம் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருப்பதே இன்று பொதுமக்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு காரணமாகும்.
அதனால்தான் கடந்த ஆண்டு தொடங்கி இப்போது வரை நீடிக்கும் பங்குச்சந்தையின் தொடர் வீழ்ச்சிகளால் பணத்தை இழந்து நிற்பவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர மக்களே. இப்படி இழந்தவர்கள்,
(1) தகவல் தொழில் நுட்பத் துறை, மென்பொருள் துறைகளில் கை நிறைய தாங்கள் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்த இளைஞர்கள் -
(2) தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவ முதியவர்கள் தங்கள் ஓய்வுக் கால நல நிதிகளை.
(3) தங்களது தொழிலில் போராடி சம்பாதித்த சொந்த தொழில் புரிவோர்
(4) மாத சம்பளம் வாங்கிக் கணக்குப் பார்த்துக் குடும்பம் நடத்தும் நடுத் தரக் குடும்பத்தினர்,
என அனைத்து தரப்பு மக்களும் தங்களது பணத்தை பங்கு சந்தையின் சரிவுகளால் இழந்து இன்று என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
பங்குச்சந்தை முதலீடு என்பது ,
பெரிய நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கோ அல்லது புதிய தொழில் தொடங்கவோ தங்களுடைய நிறுவனங்களின் குறிப்பிட்ட அளவு பங்கை பங்குச்சந்தை மூலமாக விற்கின்றனர் .
அதன் மூலம் தங்களுக்கு தேவையான மூலதனத்தை திரட்டுகின்றனர்.
பின்னர் அந்த நிறுவனம் தான் ஈட்டும் லாபத்தில் இருந்து அதன் பங்குகளை வாங்கியோருக்கு அந்தப் பங்குகளின் அளவிற்கு ஏற்ப அவர்களுக்கு உரிய லாப பங்கை பிரித்து தரும் ,
அந்த நிறுவனத்தின் செயல்பாட்டைப் பொறுத்து பங்குகள் வாங்கியோருக்கு லாபமும் , இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதைப் பொறுத்துதான் அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயரும், அல்லது குறையும்.
எனவே ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன்னர் பொது மக்கள் ,
அந்த நிறுவனத்தின் முதலீடு எவ்வளவு ,
அதன் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு ,
அந்த நிறுவனத்தின் நிகர லாபம் எவ்வளவு ,
எதிர்கால திட்டங்கள் என்ன ,
எதற்காக இப்போது குறிப்பிட்ட அளவு பங்கை பங்குச்சந்தை மூலம் விற்கப் போகிறார்கள் ,
அந்த நிறுவனம் நடத்தும் தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும்
இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் லாபம் எவ்வளவு ,
நிறுவனத்தின் வரலாறு ,
நிறுவனம் நடத்துவோரின் நம்பகத் தன்மை ,
போன்ற இன்னும் பல காரணிகளையும் ஆராய்ந்து அதன் பின்னர் அந்த நிறுவனம் மீது முழு நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் .
ஆனால் இது மாதிரியான பங்குசந்தையின் அடிப்படை எதையுமே தெரிந்து கொள்ளாமல் – தாங்கள் முதலீடு செய்யப் போகும் நிறுவனத்தைப் பற்றியும் எதுவும் தெரிந்து கொள்ளாமல் – யாரோ ஒரு பங்குசந்தை தரகர் கூறியதை அப்படியே நம்பி முதலீடு செய்ததால்தான் இன்று தங்களின் பணத்தை ஒட்டுமொத்தமாக இழந்து தவிக்கின்றனர் பொது மக்கள் .
இது போன்ற மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கொண்டுதான் நிறுவனங்களின் அதிபர்களும் , பங்கு சந்தை தரகர்களும் சேர்ந்து திட்டமிட்டு பங்கு சந்தையை ஒரு சூதாட்டக் களமாக மாற்றி அப்பாவி மக்களின் பணத்தை கோடிக் கணக்கில் வேட்டையாடி விடுகின்றனர் .
பங்குச் சந்தை சூதாட்டத்தால்தான் ஹர்ஷத்மேத்தாக்கள் போன்ற பங்கு சந்தை தரகர்கள் திடீர் கோடீஸ்வரர்களானார்கள். சேத்தன் பரேக் என்பவன் பங்குச் சந்தைத் தரகன்தான். அவனும் கோல்மால் செய்து கோடீஸ்வரன் ஆனான்.
இன்றைய பிரபல கம்பெனிகளே பங்குச் சந்தை சூதாட்டத்தில்தான் பல குட்டிகளே போட்டிருக்கின்றன. இத்தனைக்குப் பின்னரும் ஏன் பங்குச் சந்தை சூதாட்டத்தை அரசு ஊக்குவிக்கிறது?
1990 -ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார தாராள மயமாக்கல் இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் , பங்குச்சந்தை புது வேகம் கொண்டு முன்னேற ஆரம்பித்தது, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்கு சந்தையை சூதாட்டக் களமாக மாற்றத் துவங்கின,
***************************************************************************************************
சென்செக்ஸ் குறியீட்டு புள்ளி தேதி
***************************************************************************************************
1000 July 25, 1990
***************************************************************************************************
2000 Jan 15, 1992
***************************************************************************************************
3000 February 29, 1992
***************************************************************************************************
4000 March 30, 1992
***************************************************************************************************
5000 October 11, 1999
***************************************************************************************************
10,000 February 7, 2006
***************************************************************************************************
15,000 July 6, 2007
***************************************************************************************************
16,000 September 19, 2007
***************************************************************************************************
17,000 September 26, 2007
***************************************************************************************************
18,000 October 9, 2007
***************************************************************************************************
19,000 October 15, 2007
**************************************************************************************************
20,000 October 29, 2007
***************************************************************************************************
21,000 January 8, 2008
***************************************************************************************************
அதன் பின் மிகப் பெரிய சரிவை சந்தித்த பங்கு சந்தை தற்போது 10000 புள்ளிகளுக்கும் குறைவாக உள்ளது,
இந்த ஒரு வருட காலத்தில் மட்டும் பங்கு சந்தை மதிப்பு பாதியாகக் குறைந்து உள்ளது, அதாவது இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒருவர் இந்திய பங்கு சந்தையில் பத்து ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அவரது பங்கு மதிப்பு ஐந்து ரூபாய் மட்டுமே ,
அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளால் இந்திய பங்கு சந்தையில் இப்படி ஒரு அதளபாதாள சரிவு ஏற்பட்டு உள்ளது என காரணம் கூறப் படுகிறது .
வெளிநாட்டு முதலீடுகளை கட்டுப்பாடு இல்லாமல் அனுமதித்ததன் விளைவே இது, நமது நாட்டில் நடைபெறும் தொழில்களையும் , நிறுவனங்களையும் நம்பி முதலீடு செய்த நமது மக்கள் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் தங்கள் பணத்தை இழப்பது வேதனையான விஷயம் அல்லவா?
வெளிநாட்டு பண முதலைகள், இந்திய நிறுவன அதிபர்கள் , பங்கு சந்தை தரகர்கள் ஆகியோரின் கூட்டணியால் நடத்தப்பட்ட சித்து விளையாட்டுகளால் கடந்த பதினேழு ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தை திடீர் ஏற்றம் பெறுவதும் , திடீரென வீழ்ச்சி அடைவதும் தொடந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது .
பங்கு சந்தை என்பது நிலை இல்லாதது , உறுதி இல்லாதது , நம்பகத் தன்மை இல்லாதது, எந்த நேரத்திலும் நாம் முதலீடு செய்த பணத்தில் இழந்துவிடும் வைப்பு உள்ளது – என்பன போன்ற பல்வேறு அபாயங்கள் உள்ள இந்த பங்கு சந்தையை அரசு ஒரு கடிவாளம் கட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் பொதுமக்கள் தங்கள் பணத்தை இந்த அளவுக்கு இழக்காமல் இருந்திருப்பர் அல்லவா ?
மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பதுதான் அரசின் தலையாய கடமை , அப்படி இருக்கும் போது பங்கு சந்தையில் வெளி நாட்டு முதலீடுகளால் வந்து பணம் குவிவதையும் ,
அதைப் பார்த்து ஏதும் அறியாமல் தாங்களும் சம்பாதிக்க ஆசைப்பட்டு அப்பாவி பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ததையும் ,
இப்போது அந்நிய நாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப் படுவதால் பங்குகளின் விலை வீழ்ந்து அதனால் அப்பாவி மக்கள் தங்கள் தங்கள் பணத்தை இழந்து கொண்டு இருப்பதையும் ஒரு பார்வையாளரைப் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஒரு நல்ல அரசுக்கு அழகல்லவே.
இப்போது வெளிவந்துள்ள சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முறைகேடுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள சந்தேகங்கள் மற்றும் பயங்களால் பங்கு சந்தை மேலும் சீர்குலைகிறது. இன்னும் எத்தனை நிறுவனங்கள் இது போல முறைகேடுகளைச் செய்துள்ளனவோ தெரியவில்லை.
பங்கு சந்தை என்பது மாற்றம் நிறைந்தது என்று கூறுவார்கள், ஆனால் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் முதலாளிகள் முதலாளிகளாகவே இருப்பதும், அயோக்கியர்கள் கோடிகளை ஈட்டுவதும் , அப்பாவி பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்து விட்டுப் பின்னர் அழுது புலம்புவதும் எப்போதும் மாறவே இல்லை……………